பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
05:07
பெங்களூரு-ஹிந்து அறநிலையத்துறையின் புதிய கமிஷனர் ரோகிணி சிந்துாரி, கோவில்களின் ஊழியர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக, ஒரே இடத்தில் வேரூன்றியுள்ள ஊழியர்களுக்கு, நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள், ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை, இடமாற்ற வேண்டுமென்பது விதிமுறையாகும்.கோவில் ஊழியர்களுக்கு, இந்த விதிமுறை பொருந்தவில்லை. எங்கு பணிக்கு சேர்கிறார்களோ, அதே கோவிலில் ஓய்வு பெறும் வரை ஒட்டிக்கொண்டிருப்பர். இத்தகைய ஊழியர்கள், கோவில்களுக்கு வரும் பக்தர்களை, குறைந்தபட்சம் கவுரவமாகவும் நடத்துவதில்லை. பெருமளவில் ஊழல் செய்கின்றனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொல்லுார் கோவிலில், தங்கம் திருட்டு, மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் கைதான அனைவரும், கோவில் ஊழியர்கள் தான். இவர்களில் ஒருவர் மட்டுமே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மற்றவர்கள் பணிக்கு ஆஜராகின்றனர்.தற்போது அறநிலையத்துறையின், புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள ரோகிணி சிந்துாரி, பல ஆண்டுகளாக ஒரே கோவிலில் பணியாற்றும் ஊழியர்களை, வேறு இடத்துக்கு துாக்கியடிக்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து, ஏ மற்றும், பி பிரிவு கோவில்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி, அறநிலையத்துறை உதவி கமிஷனர், மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.கோவில்களில் ஊழியர்களாக பணியாற்றும் பலரும், நிர்வாக உறுப்பினர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்களாவர்.
இவர்களை இடமாற்றும் முற்பட்டால், கோவில் நிர்வாகிகள், அரசியல் தலைவர்களின் தலையீடு, அதிகமாக இருக்கும். இவர்களை இடமாற்றும் முயற்சி வெற்றியடைந்தால், இந்த வேலையை செய்த முதல் கமிஷனர் என்ற பெருமை, ரோகிணி சிந்துாரிக்கு கிடைக்கும்.அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:கர்நாடக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 34 ஆயிரத்து 523 கோவில்கள் உள்ளன. இவற்றில் 18 ஆயிரத்து 228 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஏ மற்றும் பி பிரிவு கோவில்களில், பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை, அந்தந்த மாவட்டத்துக்குள், அதே பிரிவு கோவிலுக்கு இடமாற்றம் செய்யும்படி, கோரிக்கை வந்துள்ளது.சில ஊழியர்களுக்கு, இடமாற்றம் பெற விருப்பம் உள்ளது. நிர்வாக வசதிக்காக, ஒரே கோவில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை, வேறு இடத்துக்கு இடமாற்ற, துறையின் கமிஷனர் ஆலோசிக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.