வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சதுரகிரி மலைப்பாதை ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் இன்று மழை பெய்யாததால் காலை 7 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். தாணிப்பாறை அருவியில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, சின்ன பசுக்கடை, கோணத் தலைவாசல் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணித்தனர். மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டதில், சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திரும்பினார். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை அமாவாசையை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ள நிலையில், மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடமாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.