மீனாட்சி அம்மன் கோயில் மண்டப சீரமைப்புக்கு நாமக்கல் கற்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2021 05:07
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த வீரவசந்தராய மண்டபத்தை சீரமைக்க நாமக்கல் மாவட்ட குவாரியில் இருந்து கற்கள் ஜூலை 13,14ல் கொண்டு வரப்பட்டு கோயில் பண்ணையான செங்குளத்தில் பணிகள் துவங்க உள்ளன.
இக்கோயிலில் 2018 பிப்., 2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இம்மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதை சீரமைக்க ரூ.18.10 கோடி ஒதுக்கப்பட்டது. இத்தொகையில் இதுவரை ஐ.ஐ.டி., ஆய்வு குழு வந்து சென்றதற்கான போக்குவரத்து செலவு ரூ.ஒரு லட்சம் மட்டும் செலவிடப்பட்டது.இரண்டு ஆண்டுகளாகியும் சீரமைப்பு பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் மண்டபத்தை சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்ட குவாரியில் இருந்து ஒரு லட்சம் கன அடி கருங்கற்கள் வெட்டி எடுக்க கோயில் நிர்வாகம் அனுமதி பெற்றது. கடந்த மே மாதம் கற்கள் வரவிருந்த நிலையில் ஊரடங்கால் தடைப்பட்டது.தற்போது 10 லோடுகள் தயார் நிலையில் உள்ளன. இவை ஜூலை 13,14ல் கோயிலுக்கு சொந்தமான மதுரை செங்குளம் பண்ணைக்கு கொண்டு வரப்படுகின்றன. மண்டப சீரமைப்பிற்கு 70 ஆயிரம் கனஅடி கற்கள் தேவை. இதில் 4 பெரிய துாண்கள், 80 சிறிய துாண்கள் உட்பட பத்து வகைகளில் அழகிய வேலைப்பாடுகளுடன் துாண்கள் உருவாக்கப்பட உள்ளன. அடுத்தாண்டிற்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.