பதிவு செய்த நாள்
12
ஜூலை
2021
04:07
பல்லடம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி கிடைக்குமா? என, விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், ஒரு இந்து அமைப்புகளின் சார்பில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எதிர்பார்த்த வகையில் கொண்டாட முடியாமல் போனது. நடப்பு ஆண்டு, செப்., 20 அன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை விற்பனையாளர் பாலாஜி கூறியதாவது: வழக்கமாக, புதுச்சேரியில் இருந்து விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அந்த பத்து ஆண்டுக்கு மேலாக சிலை விற்பனையில் ஈடுபட்டு, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு, கிழங்கு மாவு, பேப்பர் மாவு, குச்சிகள், மற்றும் வாட்டர் கலர் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், 700க்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனை செய்வோம். கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, கைவசம் இருந்த நூற்றுக்கும் அதிகமான சிலைகளை மட்டும் விற்பனை செய்தோம்.
ஆண்டுதோறும் நடக்கும் விநாயகர் சிலை தயாரிப்பு தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் பயன் பெறுகின்றன. வழக்கமாக மூன்று மாதங்களுக்கு முன்பே, சிலை ஆர்டர்கள் எடுத்து விடுவோம். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்குமா என்பது தெரியவில்லை. புதுச்சேரியிலும் சிலை தயாரிப்பு பணி மந்தமாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வழக்கம்போல் சிலை பிரதிஷ்டை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசு முன்கூட்டியே அனுமதி அளிக்கும் பட்சத்தில், சிலை தயாரிப்பு பணி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.