பதிவு செய்த நாள்
12
ஜூலை
2021
04:07
கடலுார்-திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் பழமை வாய்ந்த அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
கோவிலுக்கு எதிரில் 3,400 சதுர மீட்டர் பரப்பளவில் திருக்குளம் அமைந்துள்ளது.இக்குளம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிர மிப்பில் இருந்தது.கடந்த 2018ம் ஆண்டில், குளத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. ஆனால், வடக்குப் பகுதியை ஆக்கிரமித்து கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டிருந்த தால், அவற்றை அகற்றுவது தள்ளிப்போனது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றஅதிகாரிகள் முடிவு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு விருத்தாசலம் சப் - கலெக்டர் அமித்குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர். எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, ஆக்கிரமிப்பு கட்டடங்களை பொக்லைன் வாயிலாக இடித்து அகற்றும் பணி துவங்கியது.மாலை 4:00 மணி வரை, ஆக்கிரமிப்பில் இருந்த 14 கட்டடங்களில், ஏழு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து பணிகள் நடந்தன.தொடர்ந்து, 60 ஆண்டு களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த திருக்குளம், தற்போது முற்றிலுமாக மீட்கப்பட்டுள்ளதால், பக்தர்கள்மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.