பதிவு செய்த நாள்
12
ஜூலை
2021
04:07
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரோடைய்யா திருவிழா மிக எளிமையாக நேற்று கொண்டாடப்பட்டது. தொதநாடு சீமையை தலைமையிடமாக கொண்ட, கடநாடு, கம்பட்டி, ஒன்னதலை, பனஹட்டி மற்றும் கக்குச்சி கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து, பக்தர்கள் சங்கொலி எழுப்பி, வனப்பகுதியில் அமைந்துள்ள பனகுடிக்கு (வனக்கோவில்) பூசாரிகள் ஊர்வலமாக சென்றனர்.
ஆண்டுக்கு, ஒருமட்டும் நடைத்திறக்கப்படும் அக்கோவிலில், பிரம்புகளை உரசி அதிலிருந்து வெளியேறும் தீப் பொறியால் தீபமேற்றி, முதல் கன்று குட்டி ஈனும் பசு மாட்டின் பசும்பால், வனப்பகுதியில் இருந்து சேகரித்த கொம்பு தேனை கொண்டு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு, பூசாரிகள் மீண்டும் கிராம கோவிலுக்கு ஊர்வலமாக திரும்பினர். முக்கிய திருவிழா நாளான இன்று, கிராம அக்க பக்க கோவிலில், வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்த மூங்கில் தழைகளை கயிறாக திரித்து, தானிய வகைகளை கோர்த்து, கோவிலில் கட்டி வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, கோவில் கல்தூணில் எள் நெய்தீபம் ஏற்றப்படுகிறது. இதன்மூலம், ஆண்டுமுழுவதும் உணவுப் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது. நடப்பாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக, மிக எளிமையாக விழா கொண்டாடப்பட்டது.