சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு: பக்தர்கள் தரிசனம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 05:07
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படும் நிலையில், பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் கொண்டு வரவேண்டும் என்றும், பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சபரிமலை கோவில் நிர்வாகம் கூறியுள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாள்தோறும் 5,000 பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஸ்வாமி தரிசனத்திற்கு வரும் 17ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும். இவ்வாறு சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.