ஷிவமொகா: ஷிவமொகாவின் சாகர் அருகே உள்ள சிகந்துாரில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இரண்டு மாத ஊரடங்குக்கு பின், கடந்த 5ல் திறக்கப்பட்டது. இந்த கோவிலில் தினமும் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம். இரண்டு மாதத்துக்கு பின் கோவில் திறக்கப்பட்டதால் எதிர்ப்பார்ப்பை மீறி அதிக அளவில் பக்தர்கள் திரண்டு வர ஆரம்பித்துள்ளனர். இதனால் கோவிலில் தினமும் கூட்ட நெரிசல், தள்ளு முள்ளு ஏற்படுகிறது. பக்தர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை ; சமூக விலகலையும் கடைபிடிக்கவில்லை . தற்போ து சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் , அன்னதானம், தேங்காய் உடைக்க அனுமதி இல்லை . அதிக பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் கோவில் நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.