மதுரை : மதுரை அருகே உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகர் கோயிலில் அவரது குருபூஜையை முன்னிட்டு இன்று (13ம் தேதி) சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார். மதுரை அருகே உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகர் கோயிலில் அவரது குருபூஜை இன்று (13ம் தேதி) நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை கணபதி குருக்கள் தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் படித்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.