பதிவு செய்த நாள்
15
ஜூலை
2021
03:07
குரோம்பேட்டை: குரோம்பேட்டையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட, 2.2 ஏக்கர் கோவில் நிலத்தை அளந்து, அதை பாதுகாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குரோம்பேட்டை, நெமிலிச்சேரியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆனந்தவள்ளி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு சொந்தமான, 2.2 ஏக்கர் நிலம், பழைய பல்லாவரத்தில், பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி உள்ளது.அந்த நிலத்தை, 2012ல் ஆக்கிரமிப்பு செய்த சிலர், அங்கு 11 கடைகளை கட்டி, வணிக நோக்கத்தில் வாடகைக்கு விட்டிருந்தனர்.ஜூன் 28ல், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் நிலம் மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட நிலத்தில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து, நிலத்தை அளந்து, அதை பாதுகாக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.இதற்காக, நிலத்தை அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது.