அமர்நாத் பனிலிங்க தரிசனம் டிவியில் நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2021 10:07
ஜம்மு:அமர்நாத் பனிலிங்கத்துக்கு நடக்கும் பூஜைகளை, ரிலையன்ஸ்நிறுவனத்தின் ஜியோ டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டு தோறும் ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் பனி லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நலன் கருதி, இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அமர்நாத் பனி லிங்க தரிசனம், பூஜை ஆகியவற்றில் ஆன்லைன் வழியாக பக்தர்கள் பங்கேற்க, அமர்நாத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பனி லிங்கத்துக்கான பூஜை செய்யவும், பிரசாதம் பெறவும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
கோவில் அர்ச்சகர், பக்தர்களின் பெயரில் பனி லிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். தபால் வழியாக பக்தர்களின் வீட்டுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என, கோவில் வாரியம் அறிவித்தது.இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டிவி பனி லிங்கத்தை பக்தர்கள் நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.ஜியோ டிவி செயலியில் இதற்கென தனி சேனல் துவக்கப்பட்டு, அமர்நாத் பனி லிங்கத்துக்கு நடக்கும் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.