வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் ஆடித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இங்கு ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியையொட்டி 13 நாள் திருவிழா நடக்கிறது.
தற்போது கொரோனா தொற்று பரவலால் கோயில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. பக்தர்களுக்கு தரிசன அனுமதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோயில் வளாகத்திற்குள் இருக்கும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று (ஜூலை 17) முதல் ஜூலை 28 வரை காலை 9:15 மணி - 10:15 மணிக்குள்ளும், மாலை 6:00- 7:00 மணிக்குள் சுவாமி புறப்பாடு நடக்கும்.ஜூலை 22 மாலை திருக்கல்யாணம், ஜூலை 23ல் தேரோட்ட நாளில் காலை 9:15 மணி - 10:15 மணிக்குள் வளாகத்திற்குள் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். திருவிழா உற்ஸவ நிகழ்வு நேரம் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.