மேட்டுப்பாளையம்: மருதூரில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில், ஆடி மாத முதல் சனிக்கிழமை விழா நடந்தது. காரமடை மை அடுத்த மருதூரில், பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் கைகளைக் கூப்பிய வண்ணம், ஜெயமங்கள ஆஞ்சநேயராக, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பின்பு பக்தர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.