பதிவு செய்த நாள்
18
ஜூலை
2021
02:07
தஞ்சாவூர்: தஞ்சையில் சோழ மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட அய்யன்குளம், சாமந்தான்குளம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டாலும், தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
தஞ்சாவூர் நகரைச் சுற்றி பெய்யும் மழை நீரை, நாயக்கர்கள் காலத்தில் செவ்வப்பன் ஏரிக்கு கொண்டு வந்து, சிவகங்கை குளத்தில் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்து தெளிந்த நீர், ஜலசுத்ரா எனும் அமைப்பு மூலம், சுடுமண் குழாய் வழியாக மேல வீதியில் உள்ள அய்யன் குளத்திற்கும், மராட்டியர்கள் புதுப்பித்த சாமந்தான் குளத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. சாமந்தான்குளம், அய்யன்குளம் பயன்பாடு இல்லாமல், குப்பை மேடாக காட்சியளித்தது. தண்ணீர் வரத்து பாதையும் மறைந்து போனது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 10.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாமந்தான்குளம், அய்யன்குளம் சீரமைக்கப்பட்டது. இதில், ஐயன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்த நீர் வழிப்பாதையை கண்டறிந்து, அவை சீரமைக்கப்பட்டது. குளத்தை சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், சுவரில் ஓவியங்கள் என பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆட்சியில் திறப்பு விழாவும் காணப்பட்டது. ஆனால் தண்ணீரின்றி குளம் காட்சிப் பொருளாக காட்சி அளிக்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது கல்லணை கால்வாய் ஆற்றில் தண்ணீர் வருவதை பயன்படுத்தி, சாமந்தான் குளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும்.இதனால், அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றனர்.