வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு 2 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 11:30 மணி வரை சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மலையேறினர். குறைந்தளவு நீர்வரத்து இருந்ததால் ஓடைகளில் தீயணைப்புத்துறையினர் நிறுத்தப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பாக செல்வதை கண்காணித்தனர். சாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தர்களுக்கு குன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கொரோனா டெஸ்ட் எடுத்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதியில் பிரதோச வழிபாடுகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீஸ், வனத்துறை, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.