கோவில் பாதுகாப்பு திட்டம் கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2021 06:07
சென்னை:பழமை வாய்ந்த கோவில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு, பொது நல நிதிக்கான முன்மொழிவுகள் அனுப்புதல் தொடர்பாக, அறநிலையத் துறை அலுவலர்களுக்கு கமிஷனர் குமரகுருபரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புனரமைத்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. கோவில்களில் திருப்பணி மேற்கொள்வது குறித்து, ஐகோர்ட் வாயிலாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கு முன், கோவில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்க வேண்டும் எனக் கருத்துருவும் வழங்கப்பட்டுள்ளது.
வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில், மிகவும் சிதலமடைந்த பழமையான கோவில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு நிதி வசதி இல்லாத கோவில்களுக்கு, கமிஷனர் பொது நல நிதியில் இருந்து வழங்க வேண்டி, சார்நிலை அலுவலர்களால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, நிதிவசதி இல்லாத கோவில்களுக்கு உதவி வழங்க இணை, உதவிக் கமிஷனர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய வழியில் நிதி விடுவித்து, கமிஷனருக்கு முன்மொழிவு சமர்ப்பித்து, பொதுநல நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.