பதிவு செய்த நாள்
22
ஜூலை
2021
04:07
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஊழியர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு உலோக சிலைகளை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, வாழைக்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 47; புதுச்சேரி நகராட்சி அலுவலக காவலாளி. இவரது வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., கதிரவன் தலைமையிலான குழுவினர், நேற்று சுரேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, உலோகத்தால் செய்யப்பட்ட 3.5 அடி மற்றும் 2 அடி உயர நடராஜர், 3 அடி மற்றும் 1.5 அடி உயரத்தில் அம்பாள் என நான்கு சிலைகளை பறிமுதல் செய்தனர்.
சுரேஷ் குடும்பத்தினர், இவை பித்தளை சிலைகள்; காசியில் இருந்து வாங்கியதற்கான ரசீது உள்ளது எனக் கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டு போலீசாரின் வாகனத்தை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையிலான போலீசார் தனிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்பகுதியில் நின்றவர்களை விசாரித்ததில் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 8ம் தேதி 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நான்கு உலோக சிலைகளை திருடி கண்மாய்க்குள் புதைத்து வைத்தது தெரிந்தது. சேதப்படுத்திய 3 மற்றும் 1 அடி நடராஜர் சிலைகள், 2.5 அடி சிவகாமி, 1 அடி மாணிக்கவாசகர் சிலைகள் மீட்கப்பட்டன. 19 - 29 வயதுள்ள ஆறு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.