பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
04:07
கோவை : பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவிலை, இடித்து அப்புறப்படுத்தியது தொடர்பாக, சட்டரீதியாக சந்திக்க முடிவு செய்துள்ளதாக, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.
அவர் கூறியதாவது:கோவையில் முத்தண்ணன் குளக்கரையில், வடமேற்கு கரையோரம் இருந்த, பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவிலுக்கு, நானே இரண்டு முறை, கும்பாபிஷே கம் செய்திருக்கிறேன்.இக்கோவிலை மாநகராட்சி அதிகாரிகள், திட்டமிட்டு இடித்து அப்புறப்படுத்தியுள்ளது, மிகுந்த மன வேதனையளிக்கிறது.சமய பெரியவர்கள், அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுக்களை ஏற்படுத்தி ஆலோசனை பெற்று, ஆகம விதிகளின்படி கோவிலில் உள்ள சிலையை, பாலாலயம் செய்து மாற்று இடம் ஒதுக்கி, அதன் பின்பு அப்புறப்படுத்த வேண்டும்.அதைத்தவிர்த்து, அதிகாரிகள் தங்கள் இஷ்டப்படி அப்புறப்படுத்தியது தவறு. இது குறித்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.இதே கருத்தை, சிரவையாதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட, பல ஆதீனங்களும் வலியுறுத்தியுள்ளன.