பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
04:07
கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது குளங்களில், 7ல் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், முத்தண்ணன் குளக்கரையில் இருந்த, 7 கோவில்கள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. அடுத்த கட்டமாக, கிருஷ்ணாம்பதி குளத்தில் உள்ள, 5 கோவில்களை இடிக்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்கு, இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிச்சி குளத்திலும், ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன. குளக்கரையை ஆக்கிரமித்து, 540 வீடுகள் இருக்கின்றன. அவற்றில் வசிப்போருக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் கோவைப்புதுாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்பட்டுள்ளது.
அதனால், வீடுகளை காலி செய்ய, நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.பொள்ளாச்சி மெயின் ரோட்டில், குளக்கரையில் பொங்காளியம்மன் கோவில் இருக்கிறது. இதற்கு அருகில், தற்போது பணிகள் நடந்து வருகின்றன. அதனால், கோவில் இடிக்கப்படுமா அல்லது பொதுமக்கள் எதிர்ப்பதால், இடிப்பதை மாநகராட்சி தவிர்க்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டபோது, குறிச்சி குளத்தில் உள்ள கோவில் தொடர்பாக, ஸ்மார்ட் சிட்டி குழுவினரிடம் கேட்டுச் சொல்கிறேன், என்றார்.ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளிடம் கேட்டபோது, குளக்கரையில் தான் கோவில் இருக்கிறது; என்ன செய்வதென இதுவரை முடிவெடுக்கவில்லை என்றனர்.