பதிவு செய்த நாள்
26
ஜூலை
2021
04:07
ஆர்.கே.பேட்டை: ஆடி முதல், ஆவணி மாதம் வரையிலான 10 வாரங்களும், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அம்மன் கோவில்களில் கொண்டாட்டங்கள் களை கட்ட துவங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையில், கிராமத்தினர் திரளாக கூடி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். அம்மன் வழிபாடு, பெண் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தம். தீவிர விரதம் மேற்கொள்வதும், நேர்த்திக்கடனை சிரத்தையுடன் நிறைவேற்றுவதும் ஆடி மாதத்தில் வழக்கம்.குல தெய்வத்திற்கு ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபடும் பக்தர்கள், கிராம தேவதைக்கும் பூஜை நடத்துகின்றனர். இதில், ஆடி மற்றும் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் ஊர் கூடி, அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடத்துகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துார், ராகவநாயுடுகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ராகவநாயுடுகுப்பம் கிராமத்தின் மேற்கில் குளக்கரையில் உள்ள அம்மன் கோவிலில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.