பதிவு செய்த நாள்
29
ஜூலை
2021
05:07
விழுப்புரம்-விழுப்புரம் அருகே பராமரிப்பின்றி உள்ள 13ம் நுாற்றாண்டு சோழர் கால மரீச்சநாதேஸ்வரர் கோவிலை அறநிலையத்துறை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த கோனுார் கிராமத்தில், சிவனடியார்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 13ம் நுாற்றாண்டு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ மரீச்சநாதேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், முன் கல் மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி, சுற்றுச்சுவர், பிரகார தரைதளம் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதில் சுவாமி சிற்பங்கள் உருவம் பதித்த கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.இங்குள்ள சுரங்கத்தில் தியான மண்டபங்கள் உள்ளன. சித்தர்கள் வழிபாடு செய்வதோடு, இந்த சுரங்கம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வரை அமைக்கப்பட்டுள்ளது. இச்சுரங்கமும் காலபோக்கில் பராமரிப்பின்றி மூடப்பட்டு தற்போது அதன்மேல் அரசு பள்ளி கட்டப்பட்டுள்ளது.கோவிலில் சித்தானந்தா சுவாமிகளும் வழிபாடு செய்துள்ளார். மேலும் தமிழக முன்னாள் முதல்வர்கள் ஓமந்துாரார், அமைச்சர் காமராஜர், புதுச்சேரி மாநில முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.இக்கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தவுடன், மரீஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டது. மிக பிரசித்த பெற்ற கோவில் கல்வெட்டுகள் சிதிலமடைந்து 2011ம் ஆண்டு தாக்கிய தானே புயல், 2016ம் ஆண்டு வர்தா புயலில் மூலவர் சன்னதி மண்டபம் மீது மரம் விழுந்து சுவர் இடிந்தது.தற்போது அப்பகுதி மக்களால் கோவிலுக்கு அருகே ஒரு கீற்று கொட்டகையில் மூலவர் சுவாமியை பாலாயணம் செய்யப்பட்டு அங்கு வழிபாடு நடைபெற்று வருகிறது.மிகவும் பழமை வாய்ந்த மரீஸ்வரர் கோவிலை புனரமைக்க கோனுார் கிராம மக்கள் தயாராக உள்ளனர். இந்து அறநிலைய துறை உரிய அனுமதியை விரைவாக வழங்கி, பழங்கால கல்வெட்டுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.