பதிவு செய்த நாள்
29
ஜூலை
2021
05:07
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், கத்தோலிக்க பிரிவை சேர்ந்த சைரோ மலபார் தேவாலயம் அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. உதவித்தொகை: இம்மாநிலத்தில், கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவின் சைரோ மலபார் தேவாலயத்தை சேர்ந்த குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஆன்லைனில் நடந்தது. இதில் பாலா பகுதி பேராயர் ஜோசப் கல்லரங்காட்டு பேசியதாவது: கேரள மாநிலம் உருவானபோது, மாநிலத்தில் மதத்தின் அடிப்படையில், கிறிஸ்துவர்கள் இரண்டாம் இடத்தில் இருந்தனர். ஆனால் இப்போது மூன்றாவது இடத்துக்கு சென்றுவிட்டனர். மாநில மக்கள் தொகையில், கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை 18.38 சதவீதமாக தான் உள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்துவ குடும்பங்களில் குழந்தைகள் பிறப்பது 14 சதவீதமாக குறைந்துவிட்டது.
கேரளாவில், கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைஅளிக்கிறது.நம் திருச் சபையில் உள்ள உறுப்பினர்கள் எணணிக்கையும் குறைந்துள்ளது. அதனால், மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதனால், நம் திருச்சபையை சேர்ந்தவர்களில், ஐந்து அல்லது அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுள்ள தம்பதியருக்கு, உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், திருமணம் செய்து கொண்ட, நம் திருச்சபையை சேர்ந்த தம்பதியர், ஐந்து அல்லது அதற்கு மேல் குழந்தைகளை பெற்றிருந்தால், அவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 1,500 ரூபாய், அடுத்த மாதம் முதல் வழங்கப்படும்.
இலவச கல்வி: மேலும், தேவாலயத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனையில், நான்காவது மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் கிறிஸ்துவ பெண்ணுக்கு, அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். ஒரு குடும்பத்தின் நான்காவது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, திருச்சபை சார்பில் நடத்தப்படும் பொறியியல் கல்லுாரியில் உதவித் தொகையுடன் இலவச கல்வி வழங்கப்படும். கிறிஸ்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி, அதிக குழந்தைகள் பெற்றால் கஷ்டப்படக் கூடாது என்பதால், அந்த குடும்பத்துக்கு உதவி செய்யும் நோக்கிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.