காட்டில் ஒரு இளைஞன் நடந்து சென்றான். அவனுக்குப் பசித்தது. மரம் ஒன்றில் பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி பறிக்க முயன்ற போது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்தது. சட்டென சுதாரித்த அவன் கீழிருந்த ஒரு கிளையைப் பிடித்து தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தான். நல்ல உயரத்தில் இருப்பது புரிந்தது. கண்களை மூடியபடி, ‘‘ஆண்டவரே.. என்னை காப்பாற்று ’’ என அலறினான். அப்போது முதியவர் ஒருவர் அங்கு வந்தார். ‘‘பெரியவரே என்னை காப்பாற்றுங்கள்’’ என்றான். இளைஞன் மீது சிறுகல்லை வீசினார். கல் பட்டதும் வலியால் துடித்தவன் கீழே பார்த்தான். ‘‘பெரியவரே, உதவிக்கு அழைத்தால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு’’ எனக் கேட்டான். மீண்டும் ஒரு கல்லை வீசினார். ‘‘நான் கீழே வந்தால் உங்களை சும்மா விட மாட்டேன்’’ என எச்சரித்தான். பெரியவர் மீண்டும் ஒரு கல்லை வீசினார். இளைஞனுக்கு கோபம் தலைக்கேறியது. விடாமுயற்சியால் தன்னால் முடியும் என்று மெதுவாக கீழே இறங்கி வந்தான். ‘‘ உதவி தானே கேட்டேன்; கல்லெறிந்து உபத்திரவம் செய்கிறீரே’’ என்றான். ‘‘தம்பி... நான் உனக்கு உதவி தான் செய்தேன்’’ சிரித்தபடி கூறினார். இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘நான் உன்னை பார்த்த போது பயத்தில் உறைந்து போயிருந்தாய். உன் மூளை அப்போது வேலை செய்யவில்லை. கல்லை விட்டு எறிந்ததும் பதட்டம் விலகியதுடன், என் மீதிருந்த கோபத்தால் யோசிக்க ஆரம்பித்தாய். அதன் பின் நீயாகவே முயற்சியில் இறங்கினாய். வெற்றியும் பெற்று விட்டாய். பயத்தை போக்கவே, உன் மீது கல்லெறிந்து திசை திருப்பினேன்’’ எனச் சொல்லி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தார் முதியவர். எந்த செயலிலும் பதட்டத்துடன் ஈடுபடக்கூடாது. மீறி பதட்டம் அடைந்தால் மூளை வேளை செய்யாது. அதனால்தான் பதறாத காரியம் சிதறாது என்பார்கள்.