ஆடிப்பெருக்கு பூஜையை ஆற்றங்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை கரைத்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். விளக்கேற்றி அதன் முன் தீர்த்தத்தை வைக்க வேண்டும். மீனாட்சி, காமாட்சி, மாரியம்மன் போன்ற அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் துாவி 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புனித நதிகளை மனதில் தியானிக்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீர்த்தத்தை காலில் மிதி படாமல் பூச்செடி, மரத்திற்கு ஊற்ற வேண்டும். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.