பதிவு செய்த நாள்
03
ஆக
2021
03:08
அன்னூர்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், குமரன் குன்று கல்யாண சுப்ரமணியசாமி கோவில், கஞ்சப்பள்ளி தேனீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், பக்தர்கள் கோவில் வாசலில், கொடிமரம் முன்பு நின்று, கற்பூரம் ஏற்றி, இறைவனை வழிபட்டு சென்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பக்தர்கள் திரண்டனர். அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, அங்காளம்மன் கோவிலில், கோவை, திருப்பூர் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அதே பகுதியில், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் செவ்வாடை அணிந்த ஏராளமான பக்தர்கள் ஆதிபராசக்தியை வழிபட்டனர்.
சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில், ஆடி பெருக்கை முன்னிட்டு, அதிகாலையில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னூர், கோவை மற்றும் காரமடையில் இருந்து வந்து பக்தர்கள் வழிபட்டனர். இத்துடன், குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில், எல்லப்பாளையம் முருகன் கோவில் மற்றும் அல்லிகுளம், அல்லப்பாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி பெருக்கை முன்னிட்டு திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.