பதிவு செய்த நாள்
04
ஆக
2021
03:08
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு தினத்தை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில், மக்கள் கூடி, படையலிட்டு, நீத்தார் கடன் செய்து, முன்னோரை நினைவு கூர்ந்தனர்.கொரோனா பரவல் காரணமாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கோவிலில் பூஜைகள் வழக்கம்போல நடைபெற்றன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் மக்கள் வழிபட்டனர்.அன்னுார்மன்னீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், குமரன் குன்று கல்யாண சுப்ரமணியசாமி கோவில், கஞ்சப்பள்ளி தேனீஸ்வரர் கோவில்களில், பக்தர்கள் கொடிமரம் முன் நின்று, கற்பூரம் ஏற்றி, சுவாமியை வழிபட்டனர். தென்னம்பாளையம் ரோடு, அங்காளம்மன் கோவிலில், பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் செவ்வாடை அணிந்த ஏராளமான பக்தர்கள் ஆதிபராசக்தியை வழிபட்டனர்.சொக்கம்பாளையம், குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில், எல்லப்பாளையம், அல்லிகுளம், அல்லப்பாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி பெருக்கை முன்னிட்டு திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.* பவானி ஆறுமேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் கேட்டின் முன், சூடம் ஏற்றி, வழிபட்டனர். வீட்டில் சிறுவர், சிறுமியர், கன்னியர் யாரேனும் இறந்திருந்தால், அவர்களை நினைவுகூரும் வகையில், ஆற்றின் கரையோரம், ஏழு கன்னிமார் கற்களை வைத்து, அதற்கு பூஜை செய்வது வழக்கம்.பவானி ஆற்றின் படித்துறை அடைக்கப்பட்டதால், கரையோரம், பொதுமக்கள் கன்னிமார் சுவாமி கற்களை வைத்து, உணவுப் பண்டங்கள், வளையல், துணிகள், பழங்களை படையலிட்டு வழிபட்டனர்.
* மேட்டுப்பாளையம்பிளாக் தண்டர் அருகே கன்னிமார் அம்மன், கருப்பராயன் மற்றும் கல்கத்தா காளி கோவில்களுக்கு, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியா தேவி அம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் தீர்த்த குடங்களையும், கூழ் கலயங்களையும் எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.சிறுமுகையை அடுத்த கிச்சகத்துார் விருட்ச பீடத்தில், 27 நட்சத்திர அதிதேவதைகள், சித்தர்கள், நவ கிரக அதிதேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.* சூலுார்சூலுார் மேற்கு அங்காளம்மன் கோவில், பெரிய மாரியம்மன், காட்டூர் மாகாளியம்மன் கோவில், முத்துக்கவுண்டன்புதுார் மாகாளியம்மன், காடாம்பாடி சாந்தசிவ காளியம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேற்கு அங்காளம்மன் கோவிலில் ஆடி 18ம் தேதி, அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். இதை, சுற்றுவட்டார பகுதி மக்கள், கண்டு பரவசத்துடன் வழிபட்டனர்.புதுமண தம்பதிகள், தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.* பெ.நா.பாளையம்நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், அப்புலுபாளையம் மாகாளியம்மன் கோவில், சாமிசெட்டிபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன -நமது நிருபர் குழு-.