பதிவு செய்த நாள்
04
ஆக
2021
03:08
சென்னை : மண்டல வாரியாக தயாரிப்பு நிலையங்கள் அமைத்து, பக்தர்களுக்கு தரமான விபூதி, குங்குமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அதிகாரிகளுக்கு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், இணை கமிஷனர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கோவில்களை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கோவில் யானைகளுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கோவில் நந்தவனங்களில் மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்க்க வேண்டும். அந்தந்த கோவிலுக்கான தல விருட்சங்களை வளர்க்க வேண்டும்.தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், தரமான விபூதி, குங்குமம் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு, மண்டல வாரியாக தயாரிப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சேகர்பாபு பேசினார். இக்கூட்டத்தில், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.