வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதி வரும் பக்தர்களை திருப்பி அனுப்புவதற்காக 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் சதுரகிரி வருவதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கோயிலுக்கு பல்வேறு மலைப்பாதை வழியாக பக்தர்கள் வரலாம் என்பதால் அவர்களை கண்காணித்து திருப்பி அனுப்புவதற்காக தாணிப்பாறையை சுற்றியுள்ள மலைப்பாதைகள், தோப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வத்திராயிருப்பு, கோட்டையூர், அழகாபுரி உட்பட 27 இடங்களில் 4 டி.எஸ்.பி. தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் இன்று மாலை முதல் ஈடுபடுகின்றனர். மேலும் மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு, தேனி மாவட்டம் வருசநாடு யானைக்கசம் வழித்தடங்களிலும் வனத்துறையினருடன் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.