திருப்பூர் கிருஷ்ணன் ................. திருச்சிராப்பள்ளியில் முனிசிபல் சேர்மனாக இருந்தவர் நடேச ஐயர். அவருக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் மாற்று மதத்தில் சேர முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இளைஞரை எப்படி திருத்துவது என வருந்திய நடேச ஐயர், ‘‘ஒருமுறை காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க செல்வாம். பிறகு உன் விருப்பம் போல செய்’’ எனத் தெரிவித்தார். இருவரும் காஞ்சி மடத்திற்குச் சென்றனர். கூர்ந்து பார்த்த மகாபெரியவர், இளைஞரின் மனச்சலனத்தை உணர்ந்து, ‘என்ன பிரச்னை’ எனக் கேட்டார். மாற்று மதத்தில் சேர இருப்பதாக தெரிவித்தார் இளைஞர். ‘‘ஏன் இந்த முடிவுக்கு வந்தாய்’’ எனக் கேட்டார் மகாபெரியவர். மாற்று மதம் பற்றி தான் அறிந்ததை பெருமையாக சொல்லத் தொடங்கினார். சிரித்தபடியே மகாபெரியவர், ‘நீ சொன்ன அத்தனையும் நம் மதத்திலும் இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி, ‘நாளை வா! உன்னிடம் இன்னும் பேச வேண்டும்’ என அனுப்பி வைத்தார். மகாபெரியவரின் தவஆற்றலும், கனிவான வார்த்தைகளாலும் ஈர்க்கப்பட்ட இளைஞர் மூன்று நாட்கள் தொடர்ந்து மடத்திற்கு வந்தார். உருவ வழிபாடு பிடிக்கவில்லை என்றால் அருவ வழிபாட்டிற்கும் நம் மதத்தில் வழியிருக்கிறது. எல்லா மதங்களுக்கும் தாய் போன்றது நம் ஹிந்து மதம். அவரவர் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் கடவுளை நாம் வழிபடலாம் என்பதை விவரித்தார். கடவுளை அடையவே உலகிலுள்ள எல்லா மதங்களும் வழிகாட்டுகின்றன. ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறாரோ, அதிலேயே தொடர்ந்து இருப்பது தான் சரியானது. மதம் மாற்றம் என்பது முந்தைய மதத்தைத் தாழ்வானது எனக் கருதுவதால்தான் நிகழ்கிறது. அப்படி ஒரு மதத்தைத் தாழ்வாக நினைப்பது தவறு. தம்மிடம் வரும் மாற்று மதத்தினரிடம் அவரவர் மதநெறிப்படி வாழும்படி தாம் அறிவுரை கூறுவதையும் தெரிவித்தார். ‘ஹிந்துவாக பிறந்திருப்பதே பெருமையான விஷயம்’ என்ற உண்மையை உணர்ந்தார் இளைஞர். மதம் மாறும் எண்ணத்தைக் கைவிட்டார். நடேச ஐயர் மனநிறைவுடன் காஞ்சி மகாபெரியவருக்கு நன்றி தெரிவித்தார்.