இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு பார்லிமென்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். பாகிஸ்தான் பார்லி.,யில் இந்த பிரச்னை பற்றி பாக்., ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வங்வானி பேசுகையில், கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது; இது நாட்டுக்கே அவமானம். இதை பார்லி., கண்டிக்க வேண்டும், என்றார்.இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோவில் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.