மீனாட்சி அம்மன் கோயிலில் இரவில் மத்திய படை பாதுகாப்பு ஒத்திகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2021 03:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்றிரவு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், எவ்வகையில் பாதுகாப்பு அளிப்பது என இருநாட்களாக மத்திய பாதுகாப்பு படை எஸ்.பி., சந்தோஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோயிலில் பயங்கரவாதிகள் ஊடுருவும் பட்சத்தில் எந்த வழியாக கோயிலுக்குள் வீரர்கள் வருவது, எங்கெங்கு பதுங்கி தாக்குவது என்பது குறித்து நேற்றிரவு இப்படை வீரர்களும், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை குரூப் கமாண்டர் சந்தீப் குமார் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.பயங்கரவாத தாக்குதலை முறியடிப்பது, தீவிரவாதிகளிடமிருந்து பயணிகள், விமான நிலையத்தை பாதுகாப்பது, தாக்குதல் நடத்தி பிடிப்பது, விமானத்திற்குள் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.இதேபோல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் என்.எஸ்.ஜி., படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.