பதிவு செய்த நாள்
07
ஆக
2021
04:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் கெண்டையூர் சாலை, காமராஜ் நகரில் தேவி கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாரா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர். பின்பு அபிஷேகமும், பூஜையும் செய்தனர். மேலும், இக்கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கும் வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர். இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் சக்தி நகரில், விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக பூஜையும் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், சக்தி முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் விழா நேற்று நடந்தது. வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.