பதிவு செய்த நாள்
08
ஆக
2021
03:08
தொண்டாமுத்தூர்: பேரூர் படித்துறையில், ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், பாலத்தில் நின்று முன்னோர்களை பொதுமக்கள் வழிபட்டனர். ஆடி மாதத்தின் முதல் அமாவாசை தினத்தன்று, ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும், ஆடி அமாவாசை நாளன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், பேரூர் படித்துறைக்கு வருவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில், நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இதனால், ஆடி அமாவாசை தினமான நேற்று, பேரூர் படித்துறையும் தர்ப்பணம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்திருந்தது. படித்துறைக்கு செல்லும் வழிகளை, இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. தடுப்புகளை மீறி, நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் இறங்காமல் தடுக்க, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்தனர். ஆற்றில் இறங்க போலீசார் அனுமதிக்காததால், நொய்யல்ஆறு பாலத்தில் நின்று, படையல் படைத்து, கற்பூரம் ஏற்றி, பொதுமக்கள் தங்களின் முன்னோர்களை வழிபட்டு சென்றனர். பேரூர் படித்துறையில், தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள், அருகிலுள்ள வாய்க்கால், குளங்கள், சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.