திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் கொண்டாடப்பட உள்ளதாக கேரள மாநில சுற்றுலாத் துறை தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் மற்ற மாநிலங்களில் சற்று குறைந்திருக்கும் நிலையில் கேரளாவில் அதிகரித்து வருகிறது. மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இதுகுறித்து கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறியதாவது:சுற்றுலாத் துறை கடும் சரிவை சந்தித்துள்ளது.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நீடிப்பதால் இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் ஓணம் பண்டிகை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய கலை, கலாசாரம், உணவு வகைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் காணொலி காட்சியில் வெளியிடப்படும். டிஜிட்டல் ஓணம் நிகழ்ச்சிகளை ஆக., 14ல் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார். இதில் உலக மலர் கோலம் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 10ம் தேதி முதல் பெயரை பதிவு செய்யலாம். இந்த போட்டியில் பங்கேற்கும் மலையாளிகள், தங்கள் ஓணம் பூக்கோலத்தை சுற்றுலா துறையின் இணையதளத்தில் பதிவேற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.