பதிவு செய்த நாள்
09
ஆக
2021
01:08
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசை நாளான நேற்று, பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், பக்தர்களை அனுமதிக்காமல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் கோபுர வாசலின் முன்புறம் பக்தர்கள் பலர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ஓதிமலை ரோடு, விநாயகர் கோவிலில், வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டதால், திரளான பக்தர்கள் வழிபட்டனர். சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோவில், கரியாம்பாளையம், ராக்கியண்ண சுவாமி கோவில், கணேசபுரம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் இறைவன் அருள் பாலித்தார். எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டனர். அறநிலையத் துறையின் கீழ் வராத கோவில்களில் வழக்கம்போல் வழிபாடு நடந்தது. பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.