பதிவு செய்த நாள்
09
ஆக
2021
01:08
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சூளேஸ்வரன்பட்டியில், விஜயகணபதி கோவிலில், கணபதி, சுப்ரமணியர், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, அம்மனுக்கு, 108 சங்காபிேஷகம், அர்ச்சனை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கொரோனா பரவலை தடுக்க நேற்று தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு, நான்கு கால பூஜை நடந்தது.முன்னோர்களுக்கு திதிபொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் மக்கள் வழிபாடு செய்தனர். ஆற்றில் புரோகிதர்கள் உதவியுடன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். உடுமலைஉடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையன்று, சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். ஆடிப்பட்டம் செழிக்க, சுற்றுப்பகுதி விவசாயிகள், மாட்டு வண்டிகளில் வந்து, தானியங்களை வைத்து, சிறப்பு பூஜை செய்வர்.கோவிலில், நேற்று காலை முதலே சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. பாலாற்றின் கரையில், அமைந்துள்ள கன்னிமார், முருகன், சன்னதிகளிலும், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு தடைதொற்றுப்பரவல் காரணமாக, திருமூர்த்திமலைக்கு வர, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவில் அருகே, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், செல்லாமல் இருக்க, தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.தளி போலீசார், ஐந்து இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். - நிருபர் குழு -