செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில், கடந்த 6ம் தேதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.இருப்பினும், ஆடி மாத அமாவாசையான நேற்று வழக்கமாக நடக்கும் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் இல்லாமல் நடந்தது. அதிகாலை 4:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணி முதல், 8:00 மணிவரை, கோவில் வளாகத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஊஞ்சலில் அமர்த்தி கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.