ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் வெறிச்: கழிவு நீரில் பக்தர்கள் நீராடிய அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2021 02:08
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தத்தில் நீராட தடை விதித்ததால், பக்தர்கள் கழிவுநீர் கலந்த கடல்நீரில் அருவருப்புடன் நீராடி சென்றனர்.
கொரோனா பரவலை தடுக்க ஆடி அமாவாசையான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதித்ததால், தீர்த்த கரை வெறிச்சோடி கிடந்தது. ராமேஸ்வரம் வந்த பக்தர்களின் வாகனத்தை ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி பிரப்பன்வலசையில் போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பினர். இருப்பினும் அரசு பஸ்ஸில் ராமேஸ்வரம் வந்திறங்கிய பல பக்தர்கள் அக்னி கடலில் நீராட முடியாமல் போனதால், மீனவர்கள் புழக்கத்திலுள்ள கடற்கரையில் மீன் கழிவுநீர் கலந்த கடல்நீரில் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி சென்றனர். மேலும் பக்தர்கள் கோபுர தரிசனம் செய்ய ரதவீதியில் செல்லாதபடி, போலீசார் இரும்பு பேரிகாட் அமைத்து தடை ஏற்படுத்தினர். இதனால் பக்தர்கள் மனகுமுறலுடன் திரும்பி சென்றனர். பக்தர்கள் இல்லாததால் கோயில் ரதவீதி, பஸ் ஸ்டாண்ட், சன்னதி தெரு உள்ளிட்ட பல முக்கிய தெருக்களில் ஓட்டல்கள், டீக்கடைகளை வியாபாரிகள் மூடினர்.