பாக்.,கில் கோவில் சீரமைப்பு; ஹிந்துக்கள் வசம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 01:08
லாகூர்: பாகிஸ்தானில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவில் சீரமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். கோவிலுக்கு அருகேஉள்ள மதராசாவை, ஹிந்து சிறுவன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆயுதங்களுடன் ஏராளமானோர் கோவில் முன் திரண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய அவர்கள், கோவிலின் பல இடங்களை அடித்து உடைத்ததுடன், சில இடங்களை தீயிட்டு எரித்தனர். இத்தாக்குதலில் கடவுள் சிலைகள், கோவில் கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 90 பேரை கைது செய்தனர். அரசு தரப்பில் கோவில் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன. பணிகள் முழுமை அடைந்ததால் கோவில், ஹிந்துக்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.