மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு நேற்று ஏற்றி, இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருமலை நாயக்கர் காலம் முதல் பழமை மாறாமல் நடத்தப்படும் இவ்விழா அம்மனுக்காக நடத்தப்படும் தனித்திருவிழா என்பது சிறப்பு.
ஆடிப்பூரம் நட்சத்திரத் தில் மீனாட்சி அம்மன் ருதுவானதாக ஐதீகம். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் மகளாக அவதரித்த மீனாட்சி அம்மனுக்கு மானிட பெண் என்ற அடிப்படையில் ஆடிப்பூரத்தன்று ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேற்று காலை மூலவர், உற்ஸவ அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.அம்மன் முன் பாத்திரத்தில் நெல் நிரப்பி அதில் தீபம் ஏற்றி 3 முறை மேலும், கீழுமாக இறக்குவர். இதுவே ஏற்றி இறக்கும் நிகழ்ச்சியாகும். அம்மனுக்கு திருஷ்டி கழிப்பதற்காக இச்சடங்கு நடத்தப்படுகிறது.உற்ஸவ அம்மனுக்கு நைவேத்யம் படைக்கப்பட்டு, சட்டைதுணி, குங்கும சிமிழ், மஞ்சள் கிழங்கு போன்றவை வைத்து பூஜை செய்யப்பட்டது. பின் அம்மனுக்குஅணிவிக்கப்பட்ட வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
பட்டர்கள் கூறியதாவது: திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து இவ்விழா 10 நாள் ஆடித் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக சில மானியங்களை அவர் வழங்கி உள்ளார். அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் அம்மனுக்கான நடக்கும் ஒரே தனித்திருவிழா இதுமட்டும்தான். இவ்வாறு கூறினர்.