பதிவு செய்த நாள்
14
ஆக
2021
10:08
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக, திருநள்ளாறில் ஸ்ரீ சுந்தரர் ஆராதனை, ஐக்கிய திருநாள் குரு பூஜை, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாக்கள் நடந்தன.
கடவுளை அறியவும், கடவுளின் திருவருளைப் பெறவும் வழி காட்டுபவர்கள் குருமார்கள். நமக்கு வழிகாட்டியாய் இருப்பவர்கள் 63 நாயன்மார்கள். அவர்களில், ஈசனுக்கே தோழராக இருந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவரது அழகை கண்டு, சிவபெருமானே சுந்தரர் என அழைத்தமையால் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறார். இவரது பக்தி, சக மார்க்கம் எனும் தோழமை வழியை சார்ந்தது. ஆதிசைவ குல தோன்றலான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை, புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு சன்னிதி தெரு ஸ்ரீ இந்திர நிவாசில் நடந்தது.அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க புதுச்சேரி மாநில துணைத் தலைவர் திருஞான சம்பந்தம் துவக்கி வைத்தார். மாநில இணைச் செயலர் சக்தி மணிகண்டன், குரு வந்தனம் செய்தார். தங்கப்பா சிவாச்சாரியார், ரமேஷ் ஆகியோர் சுந்தரர் அஷ்டோத்திர சத அர்ச்சனை செய்தனர்.
உலக நன்மை வேண்டி, லட்ச ஆவர்த்தி பாசுபதாஸ்திர ஹோமம் நடத்தப்பட்டது. அகில இந்திய துணைத் தலைவர் சேலம் சிவ சங்கர சர்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, அகில இந்திய துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் வழங்கி, தேவார பதிக கூட்டு வழிபாட்டை நடத்தினார்.மகா தீபாராதனை அருட் பிரசாதத்தை வைத்தியநாத சிவாச்சாரியார் வழங்கினார். ராஜா சுப்பிரமணிய சிவம் நன்றி கூறினார். பிற மாவட்ட, மாநில சங்க பொறுப்பாளர்கள் காணொலி வாயிலாக பிரார்த்தனையில் பங்கேற்றனர்.- நமது நிருபர் -