பதிவு செய்த நாள்
14
ஆக
2021
02:08
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடக்கிறது. நேற்று, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பொள்ளாச்சியிலுள்ள அனைத்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது.கொரோனா ஊரடங்கால், பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அர்ச்சர்கள் மட்டும் பங்கேற்று, சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு செய்தனர். பக்தர்கள் கோவில் முன் நின்று வழிபாடு செய்தனர். கிராமங்களில் இருந்த சிறிய கோவில்களில், பக்தர்கள் வழிபாடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, அம்மனுக்கு நான்கு கால பூஜை நடந்தது. தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று தரிசனம் செய்தனர். கணபதிபாளையம் கவுமாரி பத்திரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ரமணமுதலிபுதுார் மகுடீஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது.
உடுமலை: ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், திருவிளக்கு ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர். உடுமலை தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.நெல்லுக்கடைவீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், சவுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தென்னைமரத்து வீதி காமாட்சியம்மன் கோவிலில், அம்மன் மஞ்சள் பட்டுடுத்தி அருள்பாலித்தார். மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடந்தது. எரிசனம்பட்டி, உச்சிமாகாளியம்மன் கோவிலில், வராகி அவதாரத்தில், அம்மன் அருள்பாலித்தார். உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களில், அம்மன் கோவில்களில், நேற்று உச்சிக்கால பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.- நிருபர் குழு -