காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், மூன்றாம் பிரகாரத்தில், இரட்டை திருமாளிகை உள்ளது. மன்னர்கள் காலத்தில் திருவிழாக்கள் நடக்கும்போது, அந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
இம்மண்டபம் சிதிலமடைந்து, 100 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை, 2012, 2014, 2015ல் தலா 50 லட்சம் ரூபாய் என, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணி நடந்தது. அப்பணியின் போது, இரட்டை திருமாளிகையில் இருந்த பழமையான கல்துாண்கள் காணவில்லை என, பக்தர்கள் சார்பில், 2018ல் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர், நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஸ்தபதி மற்றும் புகார்தாரர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.