பதிவு செய்த நாள்
19
ஆக
2021
03:08
பட்ஜெட் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வருமானமில்லாத கோவில்கள் திருப்பணிக்கு, அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவில்கள் திருப்பணி, கோவில்களில் தமிழில் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் சிறிய, பெரிய என 1,600க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், வருமானமுள்ள சிறப்பு மிக்க கோவில்கள் 150 ஆகும். மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்தன. தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் தவிர்த்து, பிற நாட்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால், திருவிழா, கும்பாபிேஷகம் போன்ற விழாக்கள் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் கடலுார் மாவட்டத்தில் பல கோவில்கள் கும்பாபிேஷகம் நடத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.இதில் முக்கியமாக கடலுார் ராஜகோபாலசாமி கோவில், வரதராஜ பெருமாள், முதுநகர் ஐந்துகிணற்று மாரியம்மன், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் என, 10க்கும் மேற்பட்ட கோவில்கள் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து வருகிறது
திருப்பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் பணிகளை தொய்வின்றி முடித்து, கும்பாபிேஷகம் நடத்த அரசிடம் நிதியுதவி கேட்டு, மாவட்ட அறநிலையத்துறை சார்பில், கோவில்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கும்பாபிேஷக திருப்பணி துவங்க அனுமதி கேட்டு 10க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வருமானமில்லாத பின்தங்கிய கோவில்கள் மற்றும் துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதி கோவில்கள் திருப்பணி நிதியுதவி ரூ. 1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் வருமானமில்லாத கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர் பகுதி கோவில்கள் உட்பட 70 கோவில்களுக்கு திருப்பணி நிதி ரூ. 1 லட்சம் கேட்டு, அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் கடலுார் மாவட்ட கோவில்கள் திருப்பணி தொடர்பான மற்றும் நலிந்த கோவில்கள் திருப்பணி நிதி ரூ. 1 லட்சம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அறநிலையத்துறை கடலுார் மண்டல இணை ஆணையர் தேவராஜ் கூறுகையில், அரசு அறிவிப்பின்படி, மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என, பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கும்பாபிேஷக திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ள கோவில்கள் மற்றும் புதிய திருப்பணிக்கும் நிதி கோரி அரசுக்கு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. வருமானமில்லா கோவில்கள் திருப்பணி ரூ. 1 லட்சம் கேட்டும் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.