பதிவு செய்த நாள்
22
ஆக
2021
02:08
திருப்பூர்: திருப்பூரில் வசிக்கும் கேரள மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடையணிந்து, ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மக்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவர். கடந்த, 2010ம் ஆண்டு முதல், ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.
திருப்பூரில், ஓணம் பண்டிகை நேற்று களைகட்டியிருந்தது. காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி கோவிலில், அத்தப்பூ கோலமிட்டு, ஐயப்ப சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், குருவாயூரப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில், வீட்டு வாசலில் வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டிருந்தது. கோலத்தின் இருபுறமும் குத்துவிளக்குகளை ஏற்றி வைத்து, நிறைநாழியில், தென்னம்பாளை மற்றும் நெல் வைத்து, குடும்பத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, 11 பொரியல், இனிப்பு, பாயச வகைகளுடன், நண்பர்களுக்கு ஓணம் விருந்தளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.ஓடக்காட்டில் உள்ள, கேரள சமாஜம் அலுவலகத்தில், அத்தப்பூ கோலமிட்டு, கேரள பாரம்பரிய முறைப்படி, பண்டிகை கொண்டாடப்பட்டது.