பதிவு செய்த நாள்
23
ஆக
2021
12:08
புதுடில்லி-கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை திறக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூர் பகுதியில், தர்பார் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. சீக்கிய மத குருவான பாபா குருநானக் தேவின் நினைவிடம் உள்ள இந்த குருத்வாராவுக்கு, இந்தியாவில் இருந்தும் சீக்கிய பக்தர்கள் யாத்திரையாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த குருத்வாரா மூடப்பட்டது.இந்நிலையில், மூடப்பட்டுள்ள குருத்வாராவை திறக்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது. செப்., 22ம் தேதி பாபா குருநானக் தேவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று குருத்வாராவில் சீக்கியர்கள் வழிபாடு நடத்த வருவர் என்பதால், அதை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என, குருத்வாராவுக்கு வரும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 300 பேருக்கு மட்டுமே குருத்வாராவில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவு வதால், இந்தியாவில் இருந்து வரும் சீக்கியர்கள் பாக்., அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும், அந்த அனுமதியை பெற்றால் மட்டுமே பாக்.,கில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.