ஆகம விதி மீறி ராமேஸ்வரம் கோயிலில் பிரசாதம் விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2021 08:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பிரசாதத்தை ஆகம விதியை மீறி கோயில் முன்பு ரத வீதியில் விற்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிரசம், லட்டு, முறுக்கு பிரசாதமும், இங்குள்ள 22 தீர்த்தங்களில் முக்கியமான கோடி தீர்த்தத்தை பாட்டிலில் அடைத்து விற்கின்றனர்.பிரசாதங்கள் கோயில் மடப்பள்ளியில் தயாரித்து சுவாமி, அம்மனுக்கு நெய்வேதியம், பூஜை செய்த பின் கோயில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம்.கொரோனா பரவலால் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லாததால் பிரசாதங்கள், கோடி தீர்த்த பாட்டிலை கோயில் முகப்பு மண்டபத்திற்கு வெளியே கிழக்கு ரத வீதியில் விற்றனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி துணை செயலர் சரவணன் கூறுகையில் :பிரசாதம் என்பது சுவாமிக்கு படைத்து பூஜை செய்த பின் பக்தர்களுக்கு வழங்குவது தான் மரபு. தற்போது வியாபாரத்திற்காக கோயிலுக்கு வெளியே பிரசாதங்களை விற்றால் அதன் புனிதம், மகிமை சீரழிகிறது. எனவே பிரசாதத்தை கோயில் முகப்பு மண்டபத்திற்குள் விற்க வேண்டும், என்றார்.