கர்நாடக மாநிலம் உடுப்பியில் ருக்மணி பூஜித்த கிருஷ்ணர் கோயில் உள்ளது. குழந்தையான இவரை கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிப்பது சிறப்பு. கிருஷ்ணரை குழந்தையாக பூஜிக்க வேண்டும் என்ற எண்ணம் ருக்மணிக்கு ஏற்பட்டது. தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம் இதை தெரிவிக்க சாளக்கிராம கல்லில் சிலை வடித்தார். வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் ஏந்திய இவரை ருக்மணி வழிபட்டாள். அவளுக்குப் பின் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் வழிபட்டான். துவாபர யுகம் முடிந்து கலியுகத்தில் மகான் மத்வாச்சாரியாரால் அச்சிலை உடுப்பியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒன்பது துவாரங்கள் உள்ள ஜன்னல் வழியாகத் தான் கிருஷ்ணரை தரிசிக்க முடியும். வெள்ளியால் ஆன இந்த துவாரத்திற்கு ‘நவக்கிரக துவாரம்’ என்று பெயர். இதில் கிருஷ்ணரின் 24 கோலங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. ஜன்னலின் முன்புறம் உள்ள தீர்த்த மண்டபத்தில் தினமும் இரவுபூஜை நடக்கும். இங்குள்ள கருடன் சிலை அயோத்தியில் இருந்து வதிராஜ தீர்த்தா என்பவரால் கொண்டு வரப்பட்டது. கருவறையின் கிழக்கு வாசல் கதவு விஜயதசமியன்று மட்டும் திறக்கப்படும். இதனருகே உள்ள மற்றொரு வாசல் வழியாக பூஜை செய்யும் மடாதிபதிகள் கருவறைக்குள் செல்கின்றனர். இங்கு அதிகாலை 4:30 மணிக்கு நிர்மால்ய பூஜை தரிசிப்பது சிறப்பு. பூஜைக்கு தேவையான நான்கு டன் சந்தனத்தை ஆண்டுதோறும் கர்நாடக அரசு வழங்குகிறது. கிருஷ்ணர் அருளால் குழந்தைப்பேறு பெற்றவர்கள் பசு தானமும், துலாபாரமும் நேர்ச்சை செலுத்துகின்றனர். கருவறையின் வடக்கில் மத்வாச்சாரியார் தங்கியிருந்த அறை உள்ளது. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட மடங்களின் மடாதிபதிகளே பூஜை செய்யும் அதிகாரம் பெற்றுள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள சுவர் எங்கும் உள்ள விளக்குகள் தீபாவளி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஏற்றப்படுகிறது. கோயிலின் கிழக்கே மத்வ புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இதில் மார்கழியில் நீராடினால் விருப்பம் நிறைவேறும். குளத்தின் தென்மேற்கு மூலையில் கங்கையம்மன் சன்னதி உள்ளது. தட்சனின் மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திரன் திருமணம் புரிந்தான். இவர்களில் ரோகிணியிடம் மட்டும் அன்பு செலுத்தவே மற்றவர்கள் தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன் மருமகனான சந்திரனின் பிரகாசம் நீங்கும்படி சாபமிட்டான். இங்கு கிருஷ்ணரை வழிபட்ட பின்னரே சந்திரனுக்கு சாபம் தீர்ந்தது. பவுர்ணமியன்று தரிசித்தால் மனக்குறை தீரும். எப்படி செல்வது? மங்களூருவில் இருந்து 55 கி.மீ., விசேஷ நாட்கள்: வைகாசி வசந்த விழா, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, தனுர் மாத பூஜை, மத்வ நவமி, ஸ்ரீராம நவமி