யசோதை, பகவானின் அருளால் அக்கடவுளையே புதல்வனாக அடைந்தாள். அக்குழந்தையை அவள் தெய்வத்தைப் போல் கொண்டாடினாள். அந்த பாலனும் வளர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றான். சாதாரணமாக நம் குழந்தைகளின் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவது போல் யசோதையும் கொண்டாட நினைத்தாள். கண்ணன் ஆண்ட நிறைவைப் பெறும் நன்னாளில் பிரம்ம லோகத்திலிருந்து, பிரம்மாவின் புத்ரனும் தேவரிஷியுமான நாரதர் வீணையைக் கையிலேந்தி நந்தகோகுலம் வந்தார். பகவானுக்கு பந்துக்கள் தேவர்களும் பக்தர்களும்தானே?
நாரதர் வந்த சமயம் கண்ணனுக்கு மங்கள ஸ்நானமாகிய எண்ணெய் தேய்த்தலை யசோதை செய்து கொண்டிருந்தாள். பணிப் பெண்கள் பலர் இருந்தும் யசோதை தானே அதைச் செய்து கொண்டிருந்தாள். எவருக்கும் கிடைக்காத இந்த பாக்யத்தை நாரதர் பார்த்து, யசோதையை அழைத்து, ஹே! யசோதே! நீ என்ன புண்யம் செய்தாய்! உனது பாக்யத்தை என்னவென்று சொல்வேன்! எந்தக் கண்ணனுடைய திருவடிகளில் பிரம்மா, இந்திரன், வருணன், இயமன், குபேரன் முதலிய சிறந்த தேவர்கள் விழுந்து நமஸ்கரிக்கின்றனரோ, அந்தப் பரமாத்மாவான கண்ணன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்காக உன் கால்களில் விழுந்து கட்டிக் கொண்டிருக்கிறானே! இம் மாதிரியான பாக்யம் வைகுண்டம் சென்றவர்களுக்கும் கிடைக்காது. உனது இடைச்சேரியான இந்த நந்தகோகுலம் வைகுண்டத்துக்கும் மேலாகிவிட்டதே. உன் பாக்யமே பாக்யம்! என்று கூறினார்.
இதைக் கேட்ட யசோதை, குழந்தையை தெய்வம் போல் நினைத்துப் பணிவிடை செய்து வந்தவள், இக்குழந்தை தெய்வமா என்று நினைத்து அப்யங்க ஸ்நான காலத்தில் இரண்டுதோள்களையும் பிடித்துத் தூக்கிப் பார்த்தாள். உடனே பகவான் வைகுண்ட தரிசனத்தைத் தாய்க்குக் காண்பித்தார். அப்பொழுது யசோதை அழகிய சொற்களால் பகவானை ஸ்தோத்திரம் செய்தாள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் அன்பு காட்டும் என்ற நம் பெரியோர்களின் சொல்லின் உண்மையை யசோதை அனுபவித்தாள்.
உண்மையில் நன்மக்களைப் பெறுவதால் கிடைக்கும் பேரின்பத்தை யசோதையின் இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். குழந்தை தெய்வப் பிறவியென்று அறியாமலேயே அவள் தெய்வத்தைக் கொண்டாடுவது போல் போற்றினாள். அவ்வாறு போற்றப்பட்டதன் காரணமாகவே அவளுக்கு பகவானின் திவ்ய தரிசனம் கிடைத்தது.