பதிவு செய்த நாள்
30
ஆக
2021
10:08
குழந்தை திருக்கோலத்தில் அருளும் கிருஷ்ணனை நிறைய தலங்களில் தரிசிக்கலாம். ஆனால், முறுக்கு மீசையுடன் குடும்ப சமேதராக கண்ணனைத் தரிசிக்க வேண்டும் என்றால்...? திருவல்லிக்கேணிக்கு வாருங்கள் உங்கள் அல்லல்கள் யாவும் நீங்கும். பார்த்தசாரதியாய் அருளும் பகவானைப் பார்க்கப் பார்க்க நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும். பிருந்தாரண்யம் என்று வழங்கப்பெற்ற திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் பார்த்தசராதி கோயிலுக்குச் சென்றால், திருவரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று திவ்வியதேசங்களை தரிசித்த பலன் கிடைப்பதால் சிறப்பு வாய்ந்த க்ஷேத்திரமாகப் போற்றப்பெறுகிறது.
மூலவரின் திருநாமம் வேங்கடகிருஷ்ணன் என்றாலும், உற்ஸவரான பார்த்தசாரதி பெருமாளின் பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.
மூலவர் வேங்கடகிருஷ்ணன் வலக் கையில் சங்கு ஏந்தியும், இடக் கையை வரத ஹஸ்தமாக வைத்தும் நின்ற திருக்கோலத்தில் ருக்மணி பிராட்டியார், பலராமர், சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் என்று குடும்ப சமேதராக திருக்காட்சி அருள்கிறார். வருடத்தின் அனைத்து நாட்களுமே இங்கு உற்ஸவம் என்று சொல்லும் அளவுக்கு அலங்காரங்கள். புறப்பாடுகள்! எப்போதுமே விழாக் கோலம்தான்.
ஸுமதிராஜன் என்ற மாமன்னன், தீவிர பெருமாள் பக்தர். திருமலை வேங்கடவனை தரிசித்து, பெருமாளே... உன்னை தேர்ப்பாகன் வடிவில் ஸ்ரீகண்ணனாகக் கண்டு நான் மகிழ வேண்டும்! என்று பிரார்த்திக்கிறான். மன்னனின் விருப்பத்துக்கு இசைந்த வேங்கடவன், பிருந்தாரண்ய க்ஷேத்திரத்துக்கு வா. அங்கே உனக்கு இந்தக் கோலத்தில் தரிசனம் தருகிறேன்! என்றார். அதன்படி ஸுமதிராஜன் பிருந்தாரண்யம் வந்த தவம் இருந்து பெற்ற தரிசனத்தைத்தான் நாம் என்றென்றும் வேங்கடகிருஷ்ணராக சேவித்து வருகிறோம். கிருஷ்ணராக வேங்கடவன் காட்சி தந்தமையால் வேங்கடகிருஷ்ணன்! வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.
நின்றான் - அமர்ந்தான் - கிடந்தான் ஆகிய மூன்று திருக்கோலங்களிலும் பெருமாளை இங்கு சேவித்து இன்புறலாம். நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம் யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன. திருக்கோயிலுக்கு எதிரே கைரவிணி என்கிற திருக்குளம் காணப்படுகிறது. இந்திர,சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து புனித தீர்த்தங்கள் இந்தத் திருக்குளத்தில் அடங்கி உள்ளதாக ஐதீகம். கங்கையைவிட புனிதமானது இந்தத் திருக்குளம் என்கிறது ஸ்தல புராணம். மற்ற தலங்களில் குறிப்பிட்ட நாளில் - குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால் இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் குடும்ப சமேதராக அருளாட்சி செலுத்தும் வேங்கடகிருஷ்ணரை தரிசித்தால், வினைகள் யாவும் தீரும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீஜயந்தி விழா யாதவர்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜயந்தி, அன்று இரவு மூலஸ்தானத்தில் இருந்து கண்ணன் சர்வ அலங்காரத்துடன், கைத்தலத்தில் மகாமண்டபத்துக்கு எழுந்தருளி சங்குப்பால் அமுது செய்து, பின்னர் பார்த்தசாரதி பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். மறுநாள், காலை கண்ணன் சேஷ வாகனத்தில் மாடவீதிகள் மற்றும் யாதவப்பெருமக்கள் இருக்கும் வீதிகளுக்கு செல்வார். அவர்கள் அன்புடன் தரும் பால், வெண்ணெய் மற்றும் பழங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு திருக்கோயிலுக்குள் எழுந்தருள்வார். இரவு புன்னை மர வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாளுடன் திருவீதிகளில் எழுந்தருளி, உறியடி உற்சவம் கண்டருளுவார்.